பேரணியில் பங்கேற்றபோது துப்பாக்கி சூடு; போராட்டத்தில் குதித்த இம்ரான்கான் ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் பதற்றம்

நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.

Update: 2022-11-04 22:15 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், நாட்டில் முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த வலியுறுத்தி தன்னுடைய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரமாண்ட பேரணியை கடந்த வாரம் தொடங்கினார்.

இந்த பேரணி நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாணம் வாஜிராபத் நகருக்கு சென்றது. இம்ரான்கான் கன்டெய்னர் லாரியில் பேரணியாக சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இம்ரான்கானை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதோடு அவருடன் நின்றிருந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் காயமடைந்தனர்.

இதை தொடர்ந்து இம்ரான்கான் உடனடியாக லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான சவுக்கத் கானும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது. அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தன்னை கொல்ல முயன்ற இந்த சதி திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை மந்திரி மற்றும் உளவுத்துறை தலைவர் ஆகியோர் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள இம்ரான்கான் அவர்கள் 3 பேரும் உடனடியாக தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார். அதோடு அவர் இஸ்லாமாபத்தை நோக்கிய பேரணியை தொடர்வேன் எனவும் சூளுரைத்துள்ளார்.

இதனிடையே இம்ரான்கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கராச்சியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். பைசலாபாத் நகரில் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபோன்று நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக்குழுவை அமைக்கும்படி பஞ்சாப் மாகாண அரசுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் துப்பாக்கி சூட்டின் பின்னணியில் அரசு இருப்பதாக கூறுவது அர்த்தமற்றது என கூறி அந்த குற்றச்சாட்டை நிரகாரித்துள்ளார்.

இதற்கிடையில் இம்ரான்கானை துப்பாக்கியால் சுட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார், அவர் வாக்கு மூலம் அளித்த வீடியோ இணையத்தில் கசியவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இதில் தொடர்புடைய பஞ்சாப் மாகாண போலீஸ் அதிகாரிகள் பலரை மாகாண முதல்-மந்திரி சவுத்ரி பெர்வைஸ் லாஹி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே இம்ரான்கான் துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள அவரது முன்னாள் மனைவிகளான ஜெமிமா கோல்ட்ஸ்மித், ரெஹாம் கான் ஆகிய இருவரும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளனர்.

70 வயதான இம்ரான்கானுக்கு 3 முறை திருமணம் நடந்துள்ளது. இதில் 2 திருமணங்கள் விவகாரத்தில் முடிந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அவர் 3-வது திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்