'மோடியைக் கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது' - அமித்ஷா

மோடியைக் கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-21 10:20 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு முதல் முறையாக தற்போது சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி கடந்த 18-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து 25-ந்தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ந்தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மத்திய மந்திரி அமித்ஷா காஷ்மீரில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்றைய தினம் பூஞ்ச் மாவட்டத்தின் மேதார் பகுதியில் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் முர்தாஸா கானை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது;-

"1990-களில் நடந்த எல்லை தாண்டிய துப்பாக்கி சூடுகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால் இன்று எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு நடப்பதில்லை. இதற்கு காரணம், இங்கிருந்த முந்தைய ஆட்சியாளர்கள் பாகிஸ்தானைக் கண்டு பயந்தார்கள்.

ஆனால் இப்போது மோடியைக் கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது. அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தத் துணிய மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

காஷ்மீர் இளைஞர்களின் கைகளில் இருந்து துப்பாக்கிகளையும், கற்களையும் பறித்துவிட்டு, மடிக்கணினிகளை மத்திய பா.ஜ.க. அரசு கொடுத்துள்ளது. ஜம்மு பகுதியில் உள்ள மலைகளில் துப்பாக்கி சத்தம் எதிரொலிக்க பா.ஜ.க. அரசு அனுமதிக்காது."

இவ்வாறு அமித்ஷா கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்