மராட்டியத்தில் திடீர் வன்முறை 5 பேர் காயம்; 32 பேர் கைது

ஒருவரையொருவர் கற்கள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களால் தாக்கி கொண்டனர்.

Update: 2023-05-15 23:45 GMT

புனே, 

மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷேவ்காவ் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பிரிவினர் ஊர்வலம் நடத்தினர். அப்போது திடீரென இருபிரிவினர் இடையே மோதல் வெடித்தது. இதன் காரணமாக ஒருவரையொருவர் கற்கள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களால் தாக்கி கொண்டனர்.

இந்த மோதலில் 5 பேர் காயம் அடைந்தனர். மேலும் கல்வீச்சு தாக்குதலில் அந்த பகுதியில் இருந்த பல்வேறு கடைகள், வாகனங்கள் சேதம் அடைந்தன.வன்முறை தொடர்பாக 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 32 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் வதந்திகள் பரவுவதை தடுக்க அந்த பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்ட உள்ளது. மேலும் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதை தடுக்க மாநில ரிசர்வ் படை போலீசார் மற்றும் கலவர தடுப்பு பிரிவு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

அகமதுநகரில் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோன்ற கலவரத்தை தூண்ட முயற்சிப்பவர்களை தப்ப விடமாட்டோம். இப்படிப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களை உருவாக்க உதவுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்துக்கு முந்தைய நாள் அகோலாவில் வலைத்தள பதிவு தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 100 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்