பீகாரில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வார விடுமுறை நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது - மத்திய மந்திரி கிரிராஜ் சிங் எதிர்ப்பு!

பீகாரில் 500க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில் வார விடுமுறையாக ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Update: 2022-07-30 15:17 GMT

பாட்னா,

பீகாரில் 500க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில் வார விடுமுறையாக ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமை செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

பீகாரின் கிழக்கு பகுதியில் கிஷன்கஞ்ச், அராரியா, கதிகார் மற்றும் புர்னியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30% முதல் 70% வரை முஸ்லிம் மக்கள் தொகை அதிகளவில் உள்ளது.

முஸ்லிம் தலைவர்கள் அறிவுறுத்தலின்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து இந்த நடைமுறை அமலில் உள்ளது என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதனால், ஞாயிற்று கிழமைகளில் பள்ளிகளுக்கு செல்லும் ஆசிரியர்களால், தங்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிட இயலவில்லை என சில ஆசிரியர்கள் கூறுகின்றனர் என இந்து சமூகத்தினர் சிலர் கூறியுள்ளனர்.

எனினும், இதற்கு அரசு உத்தரவு எதுவும் நடைமுறையில் இல்லை என்றும் எங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது எனவும் கல்வி துறையினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில், பீகாரில் வெள்ளிக்கிழமை அன்று வார விடுமுறையாக பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை மத்திய மந்திரி கிரிராஜ் சிங் விமர்சித்துள்ளார். உருது மொழி பயிற்று மொழியாக உள்ள பள்ளிகளில் இந்த நடைமுறை உள்ளது. இதன் மூலம் அந்த பள்ளிகளில் சாரியா முறையை திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் விமர்சித்தார்.

நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டு வரும் வெள்ளிக்கிழமைகளில் வார விடுமுறை என்ற நடைமுறை தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது. அதிலும் குறிப்பாக பாஜக மற்றும் இதர கட்சிகள், பீகாரில் ஆளுங் கட்சியாக உள்ள பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சிக்கும் இடையே பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் எழும்பிய கேள்விக்கு பதில் அளித்த பாஜக மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியதாவது, "சிறு வயது முதலே பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்பது நமக்குத் தெரியும். இந்த நிலையில் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை அளித்தது இஸ்லாமிய சாரியா நடைமுறையை திணிப்பதற்கான முயற்சியாகும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நலனுக்காக செயல்படுத்தப்படும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது" என்று கூறினார்.

எனினும் பீகாரில் அரசின் அங்கம் வகிக்கும் பாஜகவை சேர்ந்த மாநில மந்திரிகள், இந்த பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு காண முயற்சி எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்