இந்தியாவின் மிக நீண்ட கடல் பாலம்.. பைக், ஆட்டோ செல்ல அனுமதி கிடையாது...வேக வரம்பு என்ன?

இந்தியாவின் நீண்ட கடல் பாலம் என்ற சிறப்பை பெற உள்ள அடல் சேது பாலத்தின் மொத்த நீளம் 22 கி.மீட்டர் ஆகும்.;

Update:2024-01-11 14:58 IST

புதுடெல்லி,

நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், மேம்படுத்துதல் என நாடு முழுவதும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியான முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரிடப்பட்ட 'அடல் சேது' என்ற கடல் பாலமும் கட்டப்பட்டு வந்தது.

மும்பையில் உள்ள தீவு நகரான சேவரியில் இருந்து ராய்காட் மாவட்டம், உரான் தாலுகாவில் உள்ள நவா சேவாவில் இந்தபாலம் முடிவடைகிறது. இந்த திட்டம் ரூ. 18 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மொத்த நீளம் 22 கி.மீட்டர் ஆகும். இந்தியாவிலே மிக நீளமான கடல் பாலம் இதுவேயாகும். உலக அளவில் 7-வது நீளமான பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்தப் பாலம் ஆறு வழித்தடங்களைக் கொண்டுள்ளது. 'அடல் சேது' பாலத்தில் பயணம் செய்வதற்கான சில விதிகளை மும்பை போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ளது.

இந்த பாலத்தில் நான்கு சக்கர வாகனங்களுக்கான அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ. ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பைக், ஆட்டோ ரிக்சாக்கள், டிராக்டர்கள் இந்த கடல் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படாது.

கார்கள், டாக்சிகள், இலகு ரக மோட்டார் வாகனங்கள், மினி பஸ்கள் மற்றும் பஸ்கள் போன்ற வாகனங்கள் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லலாம். மேலும், பாலத்திலிருந்து ஏறும் போதும் மற்றும் இறங்கும் போதும் செல்ல வேண்டிய வேக வரம்பு மணிக்கு 40 கி. மீ. ஆகும்.

பொதுமக்களுக்கு ஆபத்து, இடையூறுகள், சிரமங்களைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்ட 1,77,903 மெட்ரிக் டன் எஃகு மற்றும் 5,04,253 மெட்ரிக் டன் சிமென்ட் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த 'அடல் சேது' பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு மும்பை - நவி மும்பை இடையேயான பயண தூரம் வெறும் 20 நிமிடங்களாக குறையும். தற்போது இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையேயான பயண தூரம் 2 மணி நேரமாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்