கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை - 5 பேர் கைது
மாயமானதாக தேடப்பட்டு வந்த வாலிபர் கள்ளக்காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் நிரலகி கிராமத்தை சேர்ந்தவர் தேவலசாப்(வயது 22). இவரது மனைவி சபினா. தேவலசாப், கடந்த ஆண்டு(2023) நவம்பர் மாதம் வீட்டில் இருந்து மாயமானார். இதுபற்றி அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கிராமத்தின் புறநகர் பகுதியில் மண்டை ஓடு உள்ளிட்ட எலும்புக் கூடுகள் சிக்கின. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அது மாயமானதாக தேடப்பட்ட தேவலசாப்பின் எலும்புக் கூடுகள் என்பது தெரிந்தது.
விசாரணையின்பேரில் சபினாவின் உறவினரான அலிசாப், தனீப் பக்வான் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் குடும்ப பிரச்சினை மற்றும் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தேவலசாப்பை அடித்து கொலை செய்தது தெரிந்தது. அதாவது தேவலசாப்பிற்கும், அலிசாப்பின் மருமகளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருந்துள்ளது. இதுகுறித்து தேவலசாப் மற்றும் அவரது மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. தேவலசாப் கள்ளக்காதலை கைவிடாமல் இருந்துள்ளார்.
இதனால் அவரை கொலை செய்ய அலிசாப் உள்ளிட்டோர் முடிவு செய்துள்ளனர். அதன்படி சம்பவத்தன்று அலிசாப், அவரது மனைவி, தனீப் பக்வான் ஆகியோர் கூட்டாக சேர்ந்து தேவலசாப்பை அடித்து கொலை செய்து உடலை கிராமத்தின் புறநகர் பகுதியில் குழி தோண்டி புதைத்தது தெரிந்தது. இதுதொடர்பாக தேவலசாப்பின் கள்ளக்காதலியை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.