ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகள்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அசத்தல்!

திரிபுராவை சேர்ந்த 53 வயதான ஷீலா ராணி தாஸ் தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-07-07 11:28 GMT

அகர்தலா,

வடகிழக்கு மாநிலமான திரிபுராவை சேர்ந்த 53 வயதான ஷீலா ராணி தாஸ் என்ற பெண்மணி, தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சம்பவம் நடந்துள்ளது.

ஷீலா தாஸ் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, அவரது கணவர் இறந்துவிட்டார். அவர் தனது இரண்டு மகள்களையும் தனியாக வளர்த்து வந்தார். இதனால் அவரது படிப்பு தடைபட்டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு மகள்களும் சேர்ந்து தங்கள் தாயாரை பொதுத்தேர்வு எழுதும்படி வற்புறுத்தினர். அதைத் தொடர்ந்து, மகள்களின் வழிகாட்டுதலின் பேரில் தாஸ் தேர்வுக்குத் தயாரானார்.

ஷீலா ராணி தாஸ், 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வை (மாத்யமிக்) இந்த ஆண்டு எழுதினார். அதே நேரத்தில் அவரது இரண்டு மகள்களும் இந்த ஆண்டு உயர்நிலைத் தேர்வை (12 ஆம் வகுப்பு) எழுதினர்.

இந்நிலையில், திரிபுரா இடைநிலைக் கல்வி வாரிய (டிபிஎஸ்இ) தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் மூவரும் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் மூலம், கல்வியைப் பொறுத்தவரை வயது ஒரு தடையல்ல என்பதை 53 வயதான ஷீலா ராணி தாஸ் நிரூபித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்