ஒரே ஆண்டில் விபத்தில் 1.31 லட்சம் பேர் பலி - மாநிலங்களவையில் மந்திரி கட்காரி தகவல்
இந்தியாவில் ஒரே ஆண்டில் சாலை விபத்துகளில் 1.31 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி கட்காரி தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ள முக்கிய தகவல்கள்:-
* இந்தியாவில் 2020-ம் ஆண்டில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 138 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 714 பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்து 48 ஆயிரத்து 279 பேர் காயம் அடைந்தனர்.
* 2019-ம் ஆண்டில் நாட்டில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 2 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 361 பேர் காயம அடைந்துள்ளனர்.
* கொரோனா தொற்றால் தேசிய நெடுஞ்சாலை கட்டுமான பணிகள் தாமதமாகி உள்ளன. இந்த தாமதம் 3 முதல் 9 மாதங்கள் வரை ஏற்பட்டுள்ளன.
* நாட்டில் 61 அரசு போக்குவரத்து நிறுவனங்கள், 1 லட்சத்து 45 ஆயிரத்து 747 பஸ்களை இயக்குகின்றன. அவற்றில் 51 ஆயிரத்து 43 பஸ்கள் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கும், இறங்குவதற்குமான வசதிகள் கொண்டவை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
84 ஆயிரம் காலியிடங்கள்
மாநிலங்களவையில் மற்றொரு கேள்விக்கு உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த் ராய் பதில் அளித்தார்.
அதில், நாட்டின் 6 துணை ராணுவ படைகளில் 84 ஆயிரத்து 405 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 29 ஆயிரத்து 985 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், எல்லை பாதுகாப்பு படையில் 19 ஆயிரத்து 254 பணியிடங்களும், சாஷஸ்திரா சீமாபால் படையில் 11 ஆயிரத்து 402 பணியிடங்களும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் 10 ஆயிரத்து 918 பணியிடங்களும், இந்தோதிபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையில் 3,187 பணியிடங்களும், அசாம் ரைபிள் படையில் 9,659 பணியிடங்களும் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.