பெங்களூரு மற்றும் சேலத்தில் கைதான பயங்கரவாதிகளுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம்; விசாரணையில் தகவல்
பெங்களூரு மற்றும் சேலத்தில் கைதான பயங்கரவாதிகள் 2 பேருக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்குவதாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஆசை வார்த்தைகளை கூறி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம்
பெங்களூரு திலக்நகரில் பதுங்கி இருந்த பயங்கரவாதியான அக்தர் உசேன் லஸ்கரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் தமிழ்நாடு சேலத்தில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியான அப்துல் அலி என்ற ஜுபான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான 2 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நிரந்தர தொடர்பில் இருந்ததும், அந்த அமைப்பில் சேருவதற்காக ஆப்கானிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காக, அவர்கள் 2 பேருக்கும் பல்வேறு ஆசை வார்த்தைகளை அந்த அமைப்பு கூறி இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது தங்களது அமைப்பில் சேருவதால், குடும்பத்திற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்து கொள்வதாகவும், இதற்காக மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தனர். இதற்கு 2 பேரும் சம்மதம் தெரிவித்து, அந்த அமைப்பில் சேருவதற்கு திட்டமிட்டு இருந்தததாக கூறப்படுகிறது.
தடயவியல் ஆய்வுக்காக செல்போன்கள்
ஆனாலும் 2 பேரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் வெளிநாடுகள், பிற நபர்களிடம் இருந்து பணம் வந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், பயங்கரவாத அமைப்புடன் அக்தர் மற்றும் ஜுபான் வாட்ஸ்-அப் மற்றும் டெலிகிராம் செல்போன் செயலி மூலமாக தகவல்களை பரிமாறிக் கொண்டு இருந்தது தெரியவந்தது. தற்போது அந்த ஆதாரங்களை அவர்கள் அழித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அக்தா், ஜுபானின் செல்போன்களை தடயவியல் ஆய்வுக்காக போலீசாா் அனுப்பி வைத்துள்ளனர். அந்த ஆய்வு அறிக்கை கிடைத்த பின்பு பயங்கரவாத அமைப்புடன் 2 பேருக்கும் இருந்த தொடர்பு, பிற தகவல் பரிமாற்றம் பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.