உ.பி: மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியை கொன்ற அண்ணன் கைது

உத்தரப்பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியை கொலை செய்த அண்ணன் கைதுசெய்யப்பட்டார்.

Update: 2022-05-27 14:05 GMT

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் சியோஹாரா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட முபாரக்பூர் கிராமத்தில் ஒரு ஆணின் உடல் பகுதி எரிந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இறந்தவர் பங்கஜ் (22) என அடையாளம் காணப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் உயிரிழந்தவரின் சகோதரரான அசோக்(32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது விசாரணையில் அசோக், தனது தம்பியை தானே கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது தம்பி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனால், தங்கள் குடும்பத்தினர் அவரை சரிவர கவனிக்க முடியாமல் சோர்வடைந்து இருந்ததாக கூறினார்.

மேலும், சம்பவத்தன்று பங்காஜ், வீட்டின் வெளியே தகராறில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அப்போது கோபமடைந்து பங்கஜின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறினார். பின்னர் உடலை அருகிலுள்ள வயலுக்கு எடுத்துச் சென்று காய்ந்த இலைகளால் மூடி தீ வைத்ததாக அசோக் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்