கனமழை எச்சரிக்கை: மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட் - இந்திய வானிலை மையம் தகவல்
இன்றும், நாளையும் மும்பையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து, பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கும் வேளையில், மும்பைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றும், நாளையும் மும்பையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பைக்கு மேலே காற்றழுத்த சுழற்சி உருவாகியிருப்பதன் காரணமாக காற்றுடன் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே, பெய்து வரும் மழை காரணமாக, மும்பையின் கிங்ஸ் சர்க்கிள் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் நவி மும்பையில் பெய்த மழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, தானே மற்றும் ராய்காட் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.