தொடர் கனமழை எதிரொலி: குடகில் 7 இடங்களில் நிலச்சரிவு

ெதாடர் கனமழையால் குடகில் ஒரே நாளில் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கிடையே தொடர் மழையால் ஹாரங்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2022-07-02 20:58 GMT

செம்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

குடகு: தொடர் கனமழையால் குடகில் ஒரே நாளில் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கிடையே தொடர் மழையால் ஹாரங்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தொடர் கனமழை

கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஜூன்) தென்மேற்கு பருவமழை தொடங்கப்பட்டாலும் தற்போது வரை பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தொடர் கனமழையால், பாகமண்டலா, தலைக்காவிரி உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தண்ணீர் திறப்பு

இதேபோல், ஹாரங்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஹாரங்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடி கொள்ளளவு கொண்ட ஹாரங்கி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,856.52 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,321 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹாரங்கி அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஹாரங்கி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ஹாரங்கி அணையில் உள்ள காவிரி தாய் சிலைக்கு மடிகேரி எம்.எல்.ஏ. அப்பச்சு ரஞ்சன் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் ஹாரங்கி அணையில் பாகினா பூஜையும் அவர் செய்தார்.

7 இடங்களில் நிலச்சரிவு

குடகில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையால் நேற்று மட்டும் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதாவது மடிகேரி தாலுகா செம்பு கிராமத்தை சேர்ந்த புஜரிகட்டா கிரிதரா என்பவரின் வீட்டு அருகில் 10 அடி நீளத்திற்கு மண்சரிவு ஏற்பட்டது. ஆனால் லேசான மண்சரிவு என்பதால் வீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதுபோல் வீட்டில் இருந்தவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

மேலும் மடிகேரி அருகே பெட்டத்தூர், பெரஜே, சம்பாஜே, கரிகே பகுதிகளிலும் லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. அதுபோல் மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும், மாதனாடு-ஜோடுபாலா சாலையோரங்களில் 2 இடங்களிலும் லேசான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மடிகேரி-மங்களூரு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் பீதி

மேலும் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் நகரசபை ஊழியர்கள், பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் குடகு மாவட்டத்தில் பல பகுதிகளில் பயங்கர மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்