விரைவில் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி கர்நாடக அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ரூ.1.30 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
கர்நாடக அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ரூ.1.30 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
பெங்களூரு துமகூரு ரோட்டில் சர்வதேச கண்காட்சி அரங்கம் உள்ளது. அதில் லகு உத்யோக் பாரதி என்ற பெயரில் இந்திய உற்பத்தி கண்காட்சி மாநாடு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் நாங்கள் விரைவில் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தியை தொடங்க இருக்கிறோம். இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ரூ.1.30 லட்சம் கோடிக்கு தனியார் நிறுவன முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். உயிரி எரிபொருள், சூரியசக்தி மின் உற்பத்தி, ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்வோம்.
ராணுவ உபகரணங்கள்
கடல்நீரில் இருந்து அம்மோனியாவை உற்பத்தி செய்ய போகிறோம். இது எங்கள் திட்டத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. கர்நாடகம் எடுக்கும் முயற்சிகளை பிற மாநிலங்களில் பின்தொடர்கிறது. அதாவது கர்நாடக அரசு தொழில்முனைவோர், ஆராய்ச்சி, வளர்ச்சி, திறன், நிறுவனங்களின் முதலீட்டை அங்கீகரிக்கிறது. மேலும் அந்த நிறுவனங்களுக்கு அரசு தன்னால் என்ன முடியுமோ அந்த உதவிகளை செய்கிறது.
மேலும் நிறுவனங்களுக்கு உற்பத்தியை பொறுத்து ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்தியுள்ளது. முன்பு ராணுவத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் அதாவது வீரா்களுக்கு தேவையான மழை கவச உடைகள், உபகரண்கள், சவப்பெட்கள் போன்றவற்றை நாம் இறக்குமதி செய்தோம். ஆனால் தற்போது நமது ராணுவத்திற்கு தேவையான உபகரணங்கள், தளவாடங்கள் தேவையில் 60 சதவீதத்தை நாமே உற்பத்தி செய்கிறோம்.
ஆராய்ச்சி-வளர்ச்சி
நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள ஒரு வலுவான ஆராய்ச்சி-வளர்ச்சி நிலை தேவை. தற்போது நாம் அந்த இலக்கை அடைவதை நோக்கி பயணிக்கிறோம். வரும் நாட்களில் 90 சதவீத ராணுவ தளவாடங்களை நாமே உற்பத்தி செய்யும் நிலை வரும். இந்தியா ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் தன்மையில் இருந்து அவற்றை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளோம். இந்த மாற்றம் தற்போது நிகழ்ந்து வருகிறது.
இந்தியாவுக்கு திறன் உளளது என்பதை இது வெளிப்படுத்துகிறது. நமது திறனை நாம் வெளியே கொண்டு வர வேண்டும். அதை பயன்படுத்தி நாம் அதற்கான பயனை அறுவடை செய்ய வேண்டும். திறமைகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். இது மாற்றத்திற்கான காலம் ஆகும். நாம் மாற்றத்தை நோக்கி முன்னேறி செல்கிறோம். இந்த நேரத்தில் வாழும் நாம் அதிர்ஷடசாலிகள். இந்த நேரத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அதிகளவில் சலுகைகள்
கர்நாடகத்தில் தொழில் முதலீடுகளுக்கான சூழல், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன. மேலும் இங்கு ஆராய்ச்சி-வளர்ச்சிக்கான தேவையான நல்ல கொள்கைகள் அமலில் இருக்கின்றன. உள்ளூர் இளைஞர்களுக்கு முதலீட்டாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கனால் அதிகளவில் சலுகைகளை வழங்குகிறோம். மேலும் கர்நாடக அரசு வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை உலக முதலீட்டாளர்களை மாநாட்டை பெங்களூருவில் நடத்துகிறது. இதில் தொழில் முதலீட்டாளர்கள் பங்கேற்று இதை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.