கர்நாடகத்தில் இன்று ஓட்டுப்பதிவு : காலை 7 மணிக்கு தொடங்குகிறது

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று (புதன்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

Update: 2023-05-10 00:35 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய ஆட்சி பதவி ஏற்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம், 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி (அதாவது இன்று) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 29-ந்தேதி அறிவித்தது.

அதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த ஏப்ரல் 13-ந் தேதி தொடங்கி 20-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து 21-ந்தேதி மனுக்கள் பரிசீலனையும், 24-ந்தேதி மனுக்கள் வாபஸ் பெறுதலும் நடந்தது. அதைத்தொடர்ந்து 24-ந்தேதி மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

2,615 வேட்பாளர்கள் போட்டி

அதன்படி 224 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதில் பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும் (மேல்கோட்டை தொகுதியில் மறைந்த விவசாய கட்சி தலைவர் புட்டண்ணய்யா மகன் தர்ஷனுக்கு ஆதரவு), ஜனதாதளம் (எஸ்) கட்சி 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும், 918 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். ஒரே ஒரு திருநங்கை போட்டியிடுகிறார்.

கடந்த 13 நாட்களாக மாநிலம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையாடினர். பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பா.ஜனதா தலைவர்களும், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ேசானியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும், தேவேகவுடா, குமாரசாமி, சி.எம்.இப்ராகீம் உள்பட ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்களும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

இன்று ஓட்டுப்பதிவு

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பகிரங்க பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து தொகுதிகள் மற்றும் மாநிலத்திற்கு சம்பந்தம் இல்லா வெளியூர் நபர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (புதன்கிழமை) நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி படைத்தவர்களாக உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், பிற வாக்காளர்கள் 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர். இதில் 11 லட்சத்து 71 ஆயிரத்து 558 பேர் இளம் வாக்காளர்கள், 5 லட்சத்து 71 ஆயிரத்து 281 பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆவார்கள். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 12 லட்சத்து 15 ஆயிரத்து 920 பேர் உள்ளனர்.

58,545 வாக்குச்சாவடிகள்

இந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 37 ஆயிரத்து 777 இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சாய் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் சுமார் 4 லட்சம் அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு நேற்று காலையில் மின்னணு வாக்கு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டன.

75 ஆயிரம் மின்னணு வாக்கு எந்திரங்கள்

இந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 75 ஆயிரத்து 603 மின்னணு வாக்கு எந்திரங்களும், 70 ஆயிரத்து 300 கட்டுப்பாட்டு எந்திரங்களும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் 76 ஆயிரத்து 202 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அத்துடன் வாக்குப்பதிவை எந்தவித அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியாக நடத்த பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 5 பேருக்கு மேல் ஒன்றாக செல்ல கூடாது, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம் நடத்த தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்