கர்நாடக சட்டசபை தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது..!
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பெங்களூரு,
224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி (அதாவது இன்று) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 29-ந்தேதி அறிவித்தது. இதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த தேர்தலில் வாக்களிக்க 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி படைத்தவர்களாக உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 37 ஆயிரத்து 777 இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் வாக்குப்பதிவை எந்தவித அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியாக நடத்த பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 5 பேருக்கு மேல் ஒன்றாக செல்ல கூடாது, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம் நடத்த தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் மே 13-ந் தேதி எண்ணப்படுகிறது.