கர்நாடகா: வனத்துறை அலுவலக கதவில் மலைப்பாம்பை தொங்க விட்ட 2 பேர் கைது...!

கர்நாடகாவில் வனத்துறை அலுவலக கதவில் மலைப்பாம்பை தொங்க விட்ட 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2022-07-06 16:27 GMT

பெங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கொல்திகே அருகே உள்ள பெர்லம்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் தனஞ்ஜெயா மற்றும் ஜெயா. கூலி தொழிலாளிகளான இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் அந்தப்பகுதியில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அந்தப்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்த அவர்கள் 2 பேரும், கல் மற்றும் கம்பால் அந்த மலைப்பாம்பை அடித்து கொன்றனர்.

பின்னர் செத்த மலைப்பாம்பை அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர். அப்போது அலுவலகத்தில் யாரும் இல்லை என தெரிகிறது. இதனால் அவா்கள் அந்த மலைப்பாம்பை வனத்துறை அலுவலகத்தின் கதவில் தொங்கவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள், கதவில் மலைப்பாம்பு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதனை கீழே தள்ளி பிடிக்க முயன்றனர். அப்போது தான் அது செத்த மலைப்பாம்பு என்பதும், அதனை யாரோ மர்மநபர்கள் கொன்று வனத்துறை அலுவலகத்தில் தொங்கவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து மர்மநபர்களை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் மலைப்பாம்பை கொன்று வனத்துறை அலுவலகத்தில் தொங்கவிட்ட தனஞ்ஜெயா, ஜெயா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் 2 பேரையும் 10 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்