ஜம்முவில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த நபரின் உடல் பாகிஸ்தானில் மீட்பு

ஜம்முவில் உள்ள ஆற்றில் குதித்து தற்கொலை செய்த நபரின் உடல் பாகிஸ்தானில் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-14 11:14 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்மு மாவட்டம் அக்நூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரஷ் நகோத்ரா. பாகிஸ்தான் எல்லையோர கிராமமான அக்நூரில் வசித்து வரும் இவர் ஆன்லைன் கேமில் 80 ஆயிரம் ரூபாய் வரை இழந்துள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த ஹரஷ் கடந்த 11ம் தேதி ஜம்முவின் சனப் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். வீட்டை விட்டு வெளியேறிய ஹரஷ் நீண்டநேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஹரசின் பைக் சனப் ஆற்றின் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஹரஷ் தற்கொலை செய்துகொண்டார் என்பதை உறுதிபடுத்தி அவரது உடலை தேடி வந்தனர்.

இந்நிலையில், சனப் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட ஹரசின் உடல் பாகிஸ்தானில் மீட்கப்பட்டுள்ளது. சனப் ஆறு இந்தியா - பாகிஸ்தான் இடையே பாய்கிறது. இதில் குதித்து தற்கொலை செய்த ஹரசின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. இதை மீட்ட பாகிஸ்தான் அதிகாரிகள் வாட்ஸ் அப் மூலம் ஹரசின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியல்கோட் பகுதியில் ஹரசின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த வாட்ஸ் அப் மெசேஜில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெஜேச் குறித்து ஹரசின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த ஹரசின் உடலை பாகிஸ்தானில் இருந்து மீட்டு கொண்டுவரவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்