இந்தியாவில் மேலும் 656 பேருக்கு கொரோனா: ஒருவர் பலி

உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்து வருகிறது.

Update: 2023-12-24 20:45 GMT

Image Courtacy: PTI

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 752 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 50 லட்சத்து 8 ஆயிரத்து 620 ஆக அதிகரித்தது. இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 71 ஆயிரத்து 545 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 420-ல் இருந்து 3 ஆயிரத்து 742 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 4 பேர் பலியான நிலையில், நேற்று ஒருவர் மட்டுமே பலியானார். கேரளாவில்தான் அந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரத்து 333 ஆக உயர்ந்தது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, நாட்டில் இதுவரை 220.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்