அரசுடன் மோதல் ேபாக்கு எதிெராலி: கேரளாவில் கவர்னர் மாளிகை முற்றுகை சீதாராம்யெச்சூரி, திருச்சி சிவா எம்.பி. பங்கேற்பு

அரசுடன் மோதல் போக்கு எதிரொலியாக கேரளாவில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் சீதாராம்யெச்சூரி, திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.

Update: 2022-11-15 19:05 GMT

திருவனந்தபுரம், 

கேரள அரசுடன் கவர்னர் ஆரிப் முகம்மது கான் சமீபகாலமாக மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகளை நேரடியாக விமர்சித்து வருகிறார். மேலும் தன்னை விமர்சித்த அமைச்சர்களை நீக்கி விடுவதாகவும் கூறி வந்தார்.

கவர்னரின் நடவடிக்கைக்கு இடதுசாரி கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் கவர்னருக்கு எதிராக போராட்டமும் நடந்து வந்தது.

இந்த நிலையில் உயர் கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் கேரளாவில் உயர் கல்வி துறையை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகை முன் முற்றுகை போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தொடங்கி வைத்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன், ஜோஸ் கே. மாணி, தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவா எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு எதிர்க்கிறது

இதில் பங்கேற்ற சீதாராம் யெச்சூரி பேசும் போது கூறியதாவது:-

கேரளாவில் உயர்கல்வி துறையில் காவி சாயம் பூச முயற்சிகள் நடந்து வருகிறது. கவர்னர் மாளிகைகள், பா.ஜ.க.வின் ஏஜென்சிகளாக மாற்றப்பட்டு வருகிறது. சாதி, மத வேறுபாடு இன்றி மனிதனை மனிதனாக பார்க்கும் அபூர்வ மாநிலங்களில் ஒன்று கேரளா ஆகும்.

கல்வி துறைக்கு காவி சாயம் பூச மத்திய அரசு முயற்சிக்கிறது. அதற்காக கவர்னரை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. கேரளா ஒரு அறிவார்ந்த விஞ்ஞான சமூகமாக மாறுவதை பா.ஜனதா அரசு எதிர்க்கிறது, நாட்டின் பன்முகத்தன்மையை தகர்க்க ஆர்.எஸ்.எஸ். முயன்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி சிவா எம்.பி. பேசும் போது கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் பல சட்டங்கள் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாகவே உள்ளன. பா.ஜனதா கட்சியின் ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆட்சி அதிகாரங்களில் கவர்னர்களின் தலையீடு எல்லை மீறிவிட்டது. கேரளாவின் நிலைதான் இப்போது தமிழ்நாட்டிலும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக காலை 10 மணிக்கு மியூசியம் சந்திப்பில் இருந்து கவர்னர் மாளிகை வரை பிரமாண்ட பேரணி நடந்தது. பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியை சேர்ந்த கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதற்கிடையே, போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி கேரள பா.ஜ.க. மாநில தலைவர் சுரேந்திரன் ஐக்கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு போராட்டம் நடத்த தடையில்லை என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கவர்னர் மாளிகை முன் நடந்த முற்றுகை போராட்டத்தையொட்டி நேற்று திருவனந்தபுரத்தில் காலை 8 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்