மணிப்பூர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கலவரக்காரர்களுக்கு கவர்னர் அழைப்பு

மணிப்பூரில் நிலவிவரும் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கலவரக்காரர்களுக்கு மாநில கவர்னர் அனுசுயா உய்கி அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2023-07-01 21:20 GMT

கலவர பூமியான மணிப்பூர்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால் சிறுபான்மையினராக உள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்த குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையில் கடந்த மே மாதம் 3-ந் தேதி ஏற்பட மோதல் இன்னும் ஓயாமல் நீண்டு வருகிறது. இதனால் மணிப்பூர் கலவர பூமியாக மாறியிருக்கிறது. கலவரங்களில் இதுவரை சுமார் 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாநிலத்தில் அமைதியையும் இயல்பு நிலையையும் கொண்டுவருமாறு மணிப்பூர் மக்களுக்கு கவர்னர் அனுசுயா உய்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் அழைப்பு

மே 3-ந் தேதி இரு சமூகங்களுக்கிடையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் பல உயிர்கள் பறிபோன நிலையில் இன்னும் கலவரம் தொடர்கிறது என்பது எனக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த நம்பமுடியாத சம்பவத்தால், விவசாயிகள் அச்சமின்றி வயல்களில் வேலை செய்ய முடியாத நிலையில், மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் நெல் சாகுபடி நடவடிக்கைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டம்

நமது பழமையான பாரம்பரியம் பேணப்படுவதற்கு, சுமுகமான மற்றும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்க, சாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே மணிப்பூரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தக் கோரியும், தற்போது நிலவும் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண வலியுறுத்தியும் நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்