ஞானவாபி மசூதி வழக்கு வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு மாற்றம்; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஞானவாபி மசூதி வழக்கை சிவில் நீதிபதியிடம் இருந்து, வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,
உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு ஆய்வு செய்தது. மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு பணிகள் நடைபெற்றது.
அப்போது, இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் ஆட்கள் நுழைய வாரணாசி கோர்ட்டு தடை விதித்தது.
ஆனால், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஞானவாபி மசூதியில் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக வாரணாசி கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது.
அப்போது, ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள கோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஆணையர் அஜய் மிஸ்ரா தனிப்பட்ட முறையில் புகைப்பட கலைஞரை மசூதிக்குள் புகைப்படம் எடுக்க அனுமதித்ததாக மற்றொரு ஆணையர் விஷால் சிங் வாரணாசி கோர்ட்டில் தெரிவித்தார். இதனால், தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை சரிவர செய்யாமல் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதால் ஆணையர் அஜய் மிஸ்ரா இந்த ஆய்வு பணியில் இருந்து நீக்கப்படுவதாக அதிரடியாக உத்தரவிட்டது.
விஷால் சிங்கை சிறப்பு வழக்கறிஞர் ஆணையராகவும், அஜய் பிரதாப் சிங்கை உதவி வழக்கறிஞர் ஆணையராகவும் கோர்ட்டு நியமித்தது. அதேவேளை, ஞானவாபி மசூதியில் நடைபெற்ற ஆய்வு பணிகள் குறித்த அறிக்கையை சமா்ப்பிக்க, ஆய்வு பணிகளை மேற்கொண்ட குழுவுக்கு மேலும் 2 நாட்கள் அவகாசம் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில், சிறப்பு வழக்கறிஞர் ஆணையர் விஷால் சிங் ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தனது அறிக்கையை மாவட்ட சிவில் நீதிபதி ரவிக்குமார் திவாகரிடம் சமா்பித்துள்ளார்.
இந்தநிலையில், ஞானவாபி மசூதி ஆய்வுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு. ஞானவாபி வழக்கு விசாரணையை தொடர வேண்டாம் என வாரணாசி நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஞானவாபி மசூதி வழக்கை சிவில் நீதிபதியிடம் இருந்து வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டு உள்ளது.
இதுபற்றி நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூரிய காந்த் மற்றும் பி.எஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறும்போது, முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை கவனத்தில் கொண்டு, உத்தர பிரதேசத்தின் ஒரு மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த நீதிபதி விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதனால், இந்த வழக்கானது சிவில் நீதிபதியிடம் இருந்து, வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு மாற்றப்படுகிறது என கூறியுள்ளது.
அதனுடன், சிவலிங்கம் கண்டறியப்பட்ட பகுதியை பாதுகாப்பது மற்றும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கியது ஆகிய இடைக்கால உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளது. இந்த வழக்கை ஜூலை 2வது வாரத்திற்கு ஒத்தி வைத்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.