உ.பி.யில் கனமழை, வெள்ளம்: 19 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் கனமழை, வெள்ளம், மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரேநாளில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் 600க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை, வெள்ளம், மின்னல் தாக்கி அம்மாநிலத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.