கேரளாவில் பெண் டாக்டர் குத்திக்கொலை
கேரளாவில் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர், விசாரணைக் கைதியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம், அந்த மாநிலத்தை உலுக்கி உள்ளது.
கொல்லம்,
கேரள மாநிலம், கொல்லம் அருகேயுள்ள நெடும்பனா அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சந்தீப் (வயது 41). இவர் மதுபோதை அடிமை ஆவார். இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் தன் பக்கத்து வீட்டு நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது நேரிட்ட கைகலப்பில் அவரது காலில் காயம் ஏற்பட்டது.
இதற்கிடையே அவர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக புகார் கிடைத்து போலீசார் அவரைக் கைது செய்தனர். அவரது கால் காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக நேற்று அதிகாலையில் அவரை கொட்டாரக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர்.
பெண் டாக்டர் குத்திக்கொலை
அங்கு பணியில் இருந்த கோட்டயத்தைச் சேர்ந்த பயிற்சி பெண் டாக்டர் வந்தனா தாஸ் (23) அவருக்கு சிகிச்சை அளித்தார். அவரது கால் காயத்துக்கு மருந்து தடவி கட்டு போட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது சந்தீப் திடீரென வெறி கொண்டு அங்கிருந்தவர்களைத் தாக்கத் தொடங்கினார். அங்கு இருந்த கத்திரியையும், அறுவை சிகிச்சை செய்வதற்கான கத்தியையும் எடுத்து, தனக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர் வந்தனாவை சரமாரியாகக் குத்தினார். இதில் அவர் அலறித்துடித்தார். மேலும், தன்னை அங்கே சிகிச்சைக்கு கொண்டு வந்திருந்த போலீசாரையும் அவர் தாக்கினார்.
படுகாயம் அடைந்த டாக்டர் வந்தனா தாசை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தனது பெற்றோர் மோகன்தாஸ், வசந்தகுமாரிக்கு ஒரே மகள் ஆவார்.
டாக்டர்கள் வேலை நிறுத்தம்
இது குறித்த தகவல், டி.வி.சேனல்களில், சமூக ஊடகங்களில் வெளியாகி காட்டுத்தீ போல பரவியது. மாநிலம் முழுவதும் இந்திய டாக்டர்கள் சங்கத்தினரும், கேரள அரசு டாக்டர்கள் சங்கத்தினரும் உடனடியாக வேலை நிறுத்தப் போராட்டத்தில குதித்தனர்.
இதனால் ஏதுமறியாத நோயாளிகள் பாதிப்புக்கு ஆளாகினர்.
ஐகோர்ட்டு விசாரணை
இந்தச் சம்பவத்தை கேரள ஐகோர்ட்டு தானாக முன் வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன், கவுசர் எடப்பகத் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வு, நடந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
இத்தகைய சம்பவங்களைக் கையாள்வதற்கு போலீசார் பயிற்சி பெற்றிருக்கும்,போது, பெண்களை, குழந்தைகளை பாதுகாப்பார்கள் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் ஒரு இளம் டாக்டரை பாதுகாக்க போலீசார் தவறிவிட்டனர். நடந்த சம்பவம் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் ஒருவிதமான ''பய மனநோயை'' (பியர் சைக்கோசிஸ்) ஏற்படுத்தி உள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளை ஏன் மூடக்கூடாது?
இந்தச் சம்பவத்தால் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டிருப்பதற்கு நீங்கள் (அரசு) என்ன சொல்லப்போகிறீர்கள்?
டாக்டர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரமுடியாது என்றால் ஆஸ்பத்திரிகளை அரசு ஏன் இழுத்து மூடக்கூடாது?
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாநில போலீஸ் டி.ஜி.பி. நாளை (இன்று) காலை 10.15 மணிக்கு காணொலிக்காட்சி வழியாக ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கேரள மாநில மனித உரிமைக் கமிஷனும் இந்தச் சம்பவத்தை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. 7 நாளில் அறிக்கை அளிக்குமாறு கொல்லம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதல்-மந்திரி கண்டனம்
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். டாக்டர் வந்தனா தாஸ் படுகொலைக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. பணியில் உள்ள சுகாதார பணியாளர்களை தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சம்பவத்தில் முழு விசாரணை நடத்தப்படும். டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மீதான தாக்குதல்களில் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கண்டனம்
கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, "பலியானவர் பயிற்சி டாக்டர், அனுபவம் இல்லாதவர். சம்பவத்தின்போது பயந்து விட்டார்'' என கூறியது, எதிர்க்கட்சியான காங்கிரசின் கண்டனத்துக்கு வழிவகுத்தது.
இதுபற்றி மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், ''போதை மற்றும் மது அடிமையான ஒருவரின் தாக்குதலை எதிர்கொள்வதில் அல்லது தன்னைக் காத்துக்கொள்வதில் டாக்டர் அனுபவமற்றவர் என்று அவர் சொல்கிறாரா? இந்த அறிக்கை ஒரு தமாஷ்'' என சாடினார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சதீசன் நடந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார். அவர், "டாக்டர் படுகொலை ஒட்டுமொத்த கேரள சமுதாயத்தையே உலுக்கி உள்ளது" என தெரிவித்தார்.
பா.ஜ.க.வும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவு ராஜாங்க மந்திரி வி.முரளீதரன், "கேரளாவில் டாக்டர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடானது" என சாடினார்.
கவர்னர், முதல்-மந்திரி அஞ்சலி
டாக்டர் வந்தனா தாஸ் உடல் வைக்கப்பட்டிருந்த திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாநில கவர்னர் ஆரிப் முகமது கானும், முதல்-மந்திரி பினராயி விஜயனும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டர், விசாரணை கைதியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம், கேரளாவை உலுக்கியதுடன் பேசுபொருளாகி இருக்கிறது.