மணீஷ் சிசோடியாவின் அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு..!
மணீஷ் சிசோடியாவின் அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் மதுபான கொள்கை அமலாக்கத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. கடந்த பிப்ரவரி 26-ந்தேதி தெரிவித்திருந்தது. அவரிடம் நடந்த 8 மணிநேர விசாரணைக்கு பின் சி.பி.ஐ. சிசோடியாவைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்த நிலையில், மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் 7 நாள் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்ததால், அவரை மேலும் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்க இயக்குனரகம் (ED) டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
அமலாக்கத்துறையின் மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு கோர்ட்டு மணீஷ் சிசோடியாவை மேலும் 5 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. மணீஷ் சிசோடியாவிடம் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை தெரிவித்ததை அடுத்து, மேலும் 5 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.