தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல் - தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
தேர்தலில் பணியாற்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் அடிப்படையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
புதுடெல்லி,
தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்க உள்ளது. இதனை முன்னிட்டு அந்த மாநிலங்களில் நேரடி கள ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து தேர்தலில் பணியாற்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் அடிப்படையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லி அரசியல் சாசன கிளப்பில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமை தாங்கினார். தேர்தல் கமிஷனர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 5 மாநிலங்களிலும் தேர்தலில் ஈடுபட உள்ள காவல், பொது மற்றும் செலவின பார்வையாளர்கள் சுமார் 1,200 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் மத்தியில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் பேசுகையில், சுதந்திரமான, நியாயமான மற்றும் எந்த தூண்டுதலும் இல்லாத தேர்தலுக்கான சமநிலையை உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல் பார்வையாளர்களுக்கு உத்தரவிட்டார்.
தேர்தல் கமிஷனர் அனுப் சந்திர பாண்டே கூறுகையில், தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும். சமூக ஊடகங்களை கண்காணித்து சரியான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வாக்காளர் பட்டியல்கள், சட்ட ஏற்பாடுகள் மற்றும் சமூக ஊடகம் தொடர்பான நடைமுறைகள் போன்ற தேர்தல் தொடர்பான பல்வேறு கருப்பொருட்கள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டது.