இலவச திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ஒரு ரூபாய் கூட யாருக்கும் கொடுக்க வேண்டாம்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அறிவுறுத்தல்

இலவச திட்டங்களுக்கு விண்ணப்பிக்க யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-06-23 20:54 GMT

பெங்களூரு:

இலவச திட்டங்களுக்கு விண்ணப்பிக்க யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை

காங்கிரஸ் தொண்டர்களுடன் நான் ஆலோசிக்கும் போது கிரகஜோதி உள்ளிட்ட அரசின் இலவச திட்டத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மக்களிடம் இருந்து ரூ.200 முதல் ரூ.1,000 வரை லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு கூறினார்கள். இலவச திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுக்கு அரசு சார்பில் ரூ.22 கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே கிரகஜோதி உள்ளிட்ட பிற இலவச திட்டங்களுக்கு ஆன்லைன், அரசு மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கும் போது ஒரு ரூபாய் கூட மக்கள் கொடுக்க வேண்டாம்.

அதையும் மீறி லஞ்சம் கேட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளிக்கலாம். இதற்காக இலவச வாடிக்கையாளர் சேவை மைய எண் வழங்கப்படும். அதன்மூலமாக மக்கள் புகார் அளிக்கலாம். அப்படி யாரேனும் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. மேலும் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் உரிமமும் ரத்து செய்யப்படும்.

தர்ணாவில் ஈடுபடுவதில் சிறந்தவர்

லஞ்சம் இல்லாத கர்நாடகத்தை உருவாக்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அன்ன பாக்ய திட்டத்திற்கு கர்நாடகத்திற்கு அரிசி கொடுக்க மத்திய அரசு மறுத்துள்ளது. அந்த திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் தர்ணா நடத்துவேன் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். எடியூரப்பா தர்ணாவில் ஈடுபடுவதில் சிறந்தவர். விதானசவுதாவில் தனியாக நின்று தர்ணாவில் ஈடுபட்டு இருக்கிறார்.

அன்னபாக்ய திட்டத்தின்படி 5 கிலோ அரிசி பெறும் ஏழை மக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்த முன்வரவில்லை. அவர்களால் 5 கிலோ அரிசியால் தங்களது வாழ்க்கையை நடத்த முடியும். ஆனால் வயிறு நிரம்பியவர்கள் மட்டுமே போராட்டம் நடத்துவதாக கூறி வருகின்றனர். மின் கட்டண உயர்வுக்கு காரணம் யார்? என்று கூறினால், பலர் வீட்டுக்கு செல்ல நேரிடும். நான் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தவன். அதுபற்றி பேச விரும்பவில்லை. எங்களது ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்