வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் கைது - இந்தியா கண்டனம்

வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கவலையளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

Update: 2024-11-26 11:19 GMT

புதுடெல்லி,

வங்காளதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசினா நாட்டை விட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து வங்காளதேசத்தின் இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பதவியேற்ற நிலையில், அங்குள்ள சிறுபான்மை மக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், வங்காளதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாக கூறி, அந்நாட்டில் உள்ள இந்து மத அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள்ளது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"வங்காளதேச சம்மிலிட் சனாதன் ஜாக்ரன் ஜோட் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சின்மய் கிருஷ்ண தாஸ் மீதான கைது நடவடிக்கை மற்றும் ஜாமீன் மறுப்பு கவலையளிக்கிறது. வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

வங்காளதேசத்தில் சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தீ வைத்தல் மற்றும் சூறையாடுதல், திருட்டு மற்றும் சேதப்படுத்துதல், தெய்வங்கள் மற்றும் கோவில்களை இழிவுபடுத்துதல் போன்ற பல சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த செயல்களை செய்தவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அமைதியான கூட்டங்கள் மூலம் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் மத தலைவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது துரதிஷ்டவசமானது. சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் கண்டனத்திற்குரியது. இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வங்காளதேச அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்