தேர்தல்களில் மின்னணு வாக்கு பதிவு இயந்திர பயன்பாட்டுக்கு எதிரான பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

தேர்தலில் வெற்றி பெறும்போது, மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை பற்றி சந்திரபாபுவோ, ஒய்.எஸ். ஜெகன் மோகனோ எதுவும் கூறுவதில்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.;

Update:2024-11-26 16:24 IST

புதுடெல்லி,

இந்தியாவில் நடத்தப்படும் தேர்தல்களில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கே.ஏ. பால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அதில், இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, வாக்கு சீட்டு வழியே வாக்கு பதிவு செய்யும் நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பி.பி. வராலே தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், அந்த இயந்திரங்களுக்கு பதிலாக, வாக்கு சீட்டுகளை பயன்படுத்தும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள நடைமுறையை இந்தியா பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த மின்னணு வாக்கு பதிவு இயந்திரம், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. எலான் மஸ்க் போன்ற பிரபலங்கள் கூட, மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என தெரிவித்து உள்ளனர் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மனு மீது நடந்த விசாரணையின்போது, சந்திரபாபு நாயுடு மற்றும் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி போன்ற தலைவர்கள் கூட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பது பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர் என பால் கூறினார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் அமர்வு, சந்திரபாபு நாயுடுவோ, ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியோ தேர்தலில் தோல்வியடையும்போது, மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்கின்றன என கூறுகின்றனர். வெற்றி பெறும்போது, அவர்கள் எதுவும் கூறுவதில்லை.

நாம் இதனை எப்படி பார்க்க வேண்டும்? இந்த மனுவை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம் என தெரிவித்து உள்ளது. நீங்கள் கூறும் அனைத்து விசயங்களையும் வாக்குவாதம் செய்யும் இடம் இது கிடையாது என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்