கொல்கத்தாவில் பெண் டாக்டர் கொலை: மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் - சுவேந்து அதிகாரி
அரசு நடத்தும் மருத்துவமனையில் பெண் மருத்துவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கு வங்காள அரசு தவறியதாக சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளம் பெண் டாக்டர் ஒருவர் கடந்த 9-ம் தேதி காலையில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அங்கு பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த அவர், 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு பயின்று வந்தார். கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தபோது அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார். கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள நபரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் மருத்துவத்துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொல்கத்தாவில் பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மாநிலம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு நடத்தும் மருத்துவமனையில் பெண் டாக்டரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தவறியதாக பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சுகாதாரம் மற்றும் உள்துறை மந்திரி பதவியை வகிக்கும் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி மக்கள் போராட வரும்படி கேட்டுக்கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக எம்எல்ஏக்கள் மம்தா பானர்ஜி பதவி விலக வலியுறுத்தி நாளை கொல்கத்தாவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பெண் டாக்டர் கொலை வழக்கில் இன்னும் சிறையில் அடைக்கப்படாத முக்கிய குற்றவாளிகளை பாதுகாக்கவும், ஆதாரங்களை நசுக்கவும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு முயற்சி செய்து வருவதாகவும் சுவேந்து குற்றம் சாட்டியுள்ளார்.