டி.கே.சிவக்குமாரின் முதல்-மந்திரி கனவு பலிக்காது முன்னாள் மந்திரி ஆர்.அசோக் தாக்கு
டி.கே.சிவக்குமாரின் முதல்-மந்திரி கனவு பலிக்காது என முன்னாள் மந்திரி ஆர்.அசோக் கூறினார்.
சிக்கமகளூரு-
டி.கே.சிவக்குமாரின் முதல்-மந்திரி கனவு பலிக்காது என முன்னாள் மந்திரி ஆர்.அசோக் கூறினார்.
பா.ஜனதா பொதுக்கூட்டம்
சிக்கமகளூருவில் காயத்ரி திருமண மண்டபத்தில் பா.ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. பொதுக்கூட்டத்தை முன்னாள் மந்திரி ஆர்.அசோக் தொடங்கி வைத்தார். இதில், முன்னாள் மந்திரிகள் சி.டி.ரவி, ஜீவராஜ், மாவட்ட பா.ஜனதா தலைவர் கல்முருடப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் முன்னாள் மந்திரி ஆர்.அசோக் பேசியதாவது:-
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி பா.ஜனதா மேலிடம் அறிவிக்கும். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்த்தேன். ஆனால் 66 இடங்களில் மட்டுமே பா.ஜனதாவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதனால் நான் ஏமாற்றம் அடைந்து உள்ளேன். நான் கனகபுரா தொகுதியில் போட்டியிட்டேன். அங்கு பூத் அளவில் வேலை செய்ய கூட பா.ஜனதாவில் ஆட்கள் இல்லை. ஆனால், நான் 19 ஆயிரம் வாக்குகள் பெற்றேன். என்னை எதிர்த்து போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வெற்றி பெற்றார். தற்போது அவர் துணை முதல்-மந்திரியாக உள்ளார்.
முதல்-மந்திரி கனவு பலிக்காது
ஆனால் அவருக்கு முதல்-மந்திரியாக வேண்டும் என ஆசை உள்ளது. அதற்கு தற்போது முதல்-மந்திரியாக உள்ள சித்தராமையா பதவியை விட்டு கொடுக்க மாட்டார். 5 ஆண்டுகள் சித்தராமையா தான் முதல்-மந்திரியாக இருப்பார். டி.கே.சிவக்குமாருக்கு கடைசி வரை ஏமாற்றம் தான் கிடைக்கும்.
அவரது கனவு பலிக்காது. மாநில பா.ஜனதா தலைவர் பதவியை நளின்குமார் கட்டீல் ராஜினமா செய்ததாக முன்னாள் மந்திரி சோமண்ணா கூறியுள்ளார். அவர் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. வி.சோமண்ணா மாநில தலைவர் பதவி ஆசையில் அப்படி கூறி வருகிறார். பா.ஜனதா கட்சி தேசிய கட்சியாகும். இதில் மாநில தலைவர் பதவியை நேரடியாக யாரும் ராஜினாமா செய்யக்கூடாது என மேலிடம் உத்தரவிட வேண்டும்.
பாடுபட வேண்டும்
பதவி ஆசைக்காக பேசுபவர்களை யாரும் நம்ப வேண்டாம். எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். இப்போதே நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் மந்திரி ஆர்.அசோக் பேசினார்.