தொழில் அதிபரின் ஜாமீன் மனு தள்ளுபடி
கூட்டுறவு வங்கியில் கடன்பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
ரூ.105 கோடி கடன்
பெங்களூருவை சேர்ந்தவர் ரகுநாத். தொழில் அதிபர். இவருக்கு சொந்தமாக கெங்கேரியில் ஓட்டல் ஒன்று உள்ளது. மேலும், அவர் சில திரைப்படங்களை இயக்கி உள்ளார். இந்த நிலையில் அவர் ஓட்டல் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று இருந்தார். அவர் வங்கியில் ரூ.105 கோடி கடனாக பெற்று இருந்தார்.
ஆனால் அவர் அந்த கடன் தொகைக்கு முறையான ஆவணங்களை இணைக்காமல் இருந்துள்ளார். இதற்கு வங்கி தலைவர், துணை தலைவர் உள்பட 4 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். மேலும், ரகுநாத் கடனாக பெற்ற பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக அவர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜாமீன் மனு தள்ளுபடி
அதுதொடர்பாக அவரை கடந்த ஜூன் 28-ந் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை முதன்மை கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது ரகுநாத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் ரகுநாத், தனக்கு ஜாமீன் வழங்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை தனிநீதிபதி அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் வாங்கிய கடன் குறித்தும், அவர் எதற்காக கடன் வாங்கினார் என்பது குறித்து விளக்கம் அளிக்க தவறிவிட்டார். எனவே அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாக அவர் கூறினார்.