மதமாற்ற நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் டெல்லி மந்திரி ராஜினாமா

பாஜக கடும் விமர்சனங்களை எழுப்பி வந்த நிலையில் ராஜேந்திர பால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2022-10-09 13:30 GMT

புதுடெல்லி,

கடந்த விஜயதசமி அன்று டெல்லி டாக்டர் அம்பேத்கர் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் இந்துமதத்தை விட்டு வெளியேறி பவுத்த மதத்தை தழுவினர். இந்த நிகழ்ச்சியில் டெல்லி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமும் பங்கேற்றார் நிகழ்ச்சியில் உறுதி மொழியை வாசித்த ராஜேந்திர பால் கவுதம்,

எனக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மீது நம்பிக்கை இல்லை. எனவே அவர்களை நான் வழிபட மாட்டேன். கடவுளின் அவதாரமாக கூறப்படும் ராமர் மீதும், கிருஷ்ணர் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. இதனால், அவர்களையும் நான் வழிபட போவது இல்லை. விஷ்ணுவின் அவதாரமே புத்தர் எனக் கூறப்படுவது பொய்ப் பிரச்சாரம்'' என்றார். டெல்லி சமூக நலத்துறை அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதோடு சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து தனிப்பட்ட முறையில் அனைத்து தெய்வங்களையும் மதிக்கிறேன். எந்த தெய்வத்தையும் அவமதிக்க வேண்டும் என கனவில் கூட நினைத்தது இல்லை என விளக்கம் அளித்தார் ராஜேந்திர பால் கவுதம். அத்துடன் அனைவரின் நம்பிக்கையையும் நான் மதிக்கிறேன். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பணவீக்கம் மற்றும் சமூக சமத்துவம் ஆகியவை பற்றியே நான் பேசினேன். ஆனால், பாஜகவினரோ எனக்கு எதிராக பொய்பிரச்சாரங்களை பரப்புகின்றனர்.

பாஜகவினர் செயல்கள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. பாஜகவின் இந்த போலி பிரசாரங்களால் வருத்தம் அடைந்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால் கவுதம் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜக கடும் விமர்சனங்களை எழுப்பி வந்த நிலையில் ராஜேந்திர பால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்