சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர் மழை துங்கபத்ரா, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

சிக்கமகளூரு மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் துங்கபத்ரா, ஹேமாவதி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2023-07-20 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் துங்கபத்ரா, ஹேமாவதி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம்

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இந்த தென்மேற்கு பருவமழை கடலோர மாவட்டங்கள், மலைநாடு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தட்சிண கன்னடா, உடுப்பி, மங்களூரு, வடகர்நாடகா, குடகு ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சிக்கமகளூரு மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகள், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.மேலும் சாலைகளில் கரைபுரண்டு ஓடிய மழை நீரால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். இதேபோல இந்த பருவமழையால் முக்கிய நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

குறிப்பாக துங்கபத்ரா, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இந்த ஆற்றங்கரையோரத்தில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், மாநில பேரிடர் மீட்பு படையினர் உடனே சம்பவ இடங்களுக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

இதேபோல .இந்த மழையால் மலைப்பகுதிகளில் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாலுகா மற்றும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் வந்து, விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர். மேலும் மழையால் இடிந்து விழுந்த வீடுகளில் இருந்தவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி மீட்பு படையினர் அறிவுறுத்தினர்.

பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

சில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதனால் இரவு முழுவதும் மக்கள் இருளில் தவித்தனர். இதையடுத்து நேற்று காலை மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பங்களை சீரமைத்தனர். அதன் பின்னர் மின் வினியோகம் சீரானது.

இந்தநிலையில் இந்த பருவமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் நீர் நிலைகள் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்