டெல்லியில் கொரோனா பாதிப்பு எதிரொலி: காங்கிரஸ் பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு எதிரொலியால், காங்கிரஸ் பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
புதுடெல்லி,
விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை முன்னிறுத்தி மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற 28-ந்தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இந்த பொதுக்கூட்டத்தை அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதிக்கு கட்சி தள்ளிவைத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் தளத்தில், 'டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, ராம்லீலா மைதானத்தில் 28-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் செப்டம்பர் 4-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. உணர்வற்ற மோடி அரசுக்கு இந்த கூட்டம் உறுதியான செய்தி ஒன்றை அனுப்பும்' என்று குறிப்பிட்டு உள்ளார்.