சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெற்றது முறைகேடான வெற்றி-குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரு:-
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
விசாரணை நடத்த வேண்டும்
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது. எனது மகன் நிகில் போட்டியிட்ட ராமநகரில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு காங்கிரசார் வாக்காளர்களுக்கு கியூ.ஆர். கோடு கூப்பன் மூலம் பணம் வினியோகம் செய்தனர். அந்த கூப்பனில் தலா ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் இருந்தது. இதனால் எனது மகன் அங்கு தோல்வி அடைந்தார்.
இந்த தேர்தல் முறைகேடு குறித்து சித்தராமையா விசாரணை நடத்துவாரா?. இவ்வாறு கூப்பன்களை வழங்க காங்கிரசார் எங்கிருந்து பணத்தை கொண்டு வந்தனர்?. காங்கிரஸ் வெற்றி பெற்றால் மட்டுமே, அந்த கூப்பனில் உள்ள தொகைக்கு கடைகளில் சென்று பொருட்களை வாங்க முடியும் என்று வாக்காளர்களுக்கு கூறியுள்ளனர். இது மிகப்பெரிய தேர்தல் முறைகேடு ஆகும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.
நிறுத்த வேண்டும்
ராமநகர், மாகடி, ராஜராஜேஸ்வரிநகர் உள்ளிட்ட 50 தொகுதிகளில் இத்தகைய முறைகேடுகளை காங்கிரஸ் செய்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 60 ஆயிரம் கூப்பன்களை காங்கிரசார் வழங்கியுள்ளனர். ஜனநாயகத்தில் வெற்றி பெற்றுவிட்டால் அது வெற்றி தான். ஆனால் மகாத்மா காந்தி பெயரை கூறி அரசியல் செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் தரம் தாழ்ந்து மோசமான வேலைகளை செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சி, வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இருக்கட்டும், நீங்கள் எப்போது கட்சியை கலைக்க போகிறீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளது. முன்பு ஒரு தேர்தலில் காங்கிரஸ் வெறும் 39 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை கலைத்தனரா?. காங்கிரஸ் ஆணவத்துடன் பேசுவதை நிறுத்த வேண்டும்.
நிறைவேற்ற முடியாது
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் மாநில தலைவர் பதவியை சி.எம்.இப்ராகிம் ராஜினாமா செய்துள்ளார். அதை நாங்கள் ஏற்கவில்லை. அதனால் கட்சி தலைவர் பதவியில் அவரே நீடிப்பார். அதேபோல் எங்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமியின் ராஜினாமா கடிதத்தையும் நிராகரித்துவிட்டோம். அவரும் அந்த பதவியில் தொடர்ந்து செயல்படுவார்.
காங்கிரஸ் அரசால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே இதை அமல்படுத்துவதாக கூறினர். ஆனால் அவர்கள் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால் நாங்கள் வீதியில் இறங்கி போராடுவோம். மக்கள் தங்களுக்கு அநீதி ஏற்பட்டுவிட்டதாக கருதினால் எங்களுடன் கைகோர்த்து போராட்டத்தில் ஈடுபடலாம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.