புதுச்சேரிக்கு சோதனை ஓட்டமாக வந்த சிறிய ரக விமானம் முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார்
புதுச்சேரிக்கு சோதனை ஓட்டமாக சிறிய ரக விமானம் வந்தது. அதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார்.
புதுச்சேரி,
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூருவுக்கு விமான சேவை நடந்து வருகிறது. இந்தநிலையில் பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் இருந்து சென்னை, திருப்பதி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதுவை விமான நிலையத்திற்கு சோதனை ஓட்டமாக விமானம் வந்து சென்றது. அந்த விமானத்தில் மொத்தம் 19 இருக்கைகள் உள்ளன.
அந்த விமானத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அந்த விமானம் புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து 'ஏர் ஷபா' நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் முருகபெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:-
'ஏர் ஷபா' நிறுவனம் மூலமாக புதிதாக 5 சிறிய ரக விமானங்கள் வாங்கப்படுகிறது. அந்த சிறிய ரக விமானங்கள் புதுவை, சென்னை, திருப்பதி, பெங்களூரு, வேலூர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு தீபாவளி முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் என நம்புகிறோம். இந்த சிறிய ரக விமானத்தில் 19 பேர் மட்டுமே பயணிக்க முடியும். விமான சேவை கட்டணமாக ரூ.1,500 முதல் ரூ.3,500 வரை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது நடுத்தர ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.