ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கு: கர்நாடக அரசு 5 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்

ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கில் கர்நாடக அரசு 5 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்

Update: 2022-11-07 18:45 GMT

பெங்களூரு: 

கர்நாடகத்தில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் செல்போன் செயலி மூலம் வாடகை ஆட்டோ சேவைவையை வழங்கி வருகிறது. அந்த ஆட்டோக்கள் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து மாநில போக்குவரத்து துறை சார்பில் அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் அளிக்க நோட்டீசு அனுப்பியது. மேலும், நிறுவனங்களின் ஆட்டோ சேவைக்கு தடை விதித்தது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்கவும், விரைவில் இறுதி கட்டணம் குறித்து அரசு மற்றும் அந்த நிறுவனங்கள் இணைந்து ஆலோசனை நடத்தவும் அறிவுறுத்தியது. அந்த ஆலோசனை கூட்டத்தில் குறைந்தபட்சமாக 2 கிலோ மீட்டருக்கு ரூ.100 நிர்ணயிக்க வேண்டும் என தனியார் நிறுவனங்கள் கூறின.

ஆனால் அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில் கர்நாடக அரசில் கட்டண முறையை எதிர்த்தும், குறைந்தபட்சமாக ரூ.100-ஐ 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டணமாக வசூலிக்க அனுமதிக்க கோரியும் ஐகோர்ட்டில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கு விசாரணை நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற்றது.அப்போது வாடகை ஆட்டோ சேவைக்கு கட்டணம் நிர்ணயிப்பது குறித்து உரிய ஆலோசனை நடத்தவும், ஓலா, ஊபர் நிறுவனங்களின் கூடுதல் கட்டண கோரிக்கை குறித்து பதில் அளிக்கவும் மாநில அரசுக்கு 5 நாட்கள் கால அவகாசம் வழங்கி நோட்டீசு அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை கமிஷனர் குமார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்