'இந்திய அரசு மீதான கனடா பிரதமரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது' - சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி

கனடா பிரதமர் இந்திய அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என பிரியங்கா சதுர்வேதி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-20 19:12 GMT

மும்பை,

பஞ்சாப்பில் இந்து மத போதகரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக காலிஸ்தான் புலிப்படை என்ற அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற நபரை இந்தியா கடந்த 2020-ம் ஆண்டு பயங்கரவாதியாக அறிவித்தது. இந்திய அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங், கனடா நாட்டில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார்.

இந்நிலையில் ஹர்தீப் சிங், கடந்த ஜூன் 18-ந்தேதி கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா நகரில் சீக்கிய மத வழிபாட்டு தலம் அருகே மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் கனடா நாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா குடியுரிமை பெற்ற ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடர்பு உள்ளதாக கூறி பரபரப்பை கிளப்பினார். கனடா பிரதமரின் குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. கனடாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக கனடா நாட்டு தூதரக உயர் அதிகாரி 5 நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்திய அரசு மீதான கனடா பிரதமரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது மற்றும் துரதிருஷ்டவசமானது என சிவசேனா(உத்தவ்) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"கனடா பிரதமர் தனிப்பட்ட முறையில் இந்தியாவின் பெயரைச் சொல்லி ஆதாரமற்ற சில குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். இந்த துரதிருஷ்டவசமான முன்னேற்றம் சர்வதேச பாதுகாப்புக்கு எதிரானது. இந்தியாவிற்கு எதிராக வளர்ந்து வரும் சிந்தனைகள் குறித்த நமது கவலைகளை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் இது அமைந்துள்ளது."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்