பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக்! இந்தியா பாடம் கற்க வேண்டும்..!- சசிதரூர்
இந்தியாவில் பெரும்பான்மை இல்லாத சமுதாயத்தை சேர்ந்தவர்களை அதிகாரமிக்க பதவிகளில் அமர செய்ய வேண்டும் எனவும், இது சாத்தியமா? என்பது பற்றிய விவாதங்கள் கிளம்பி உள்ளன.
திருவனந்தபுரம்
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்து மதத்தை பின்பற்றும் பிரிட்டனின் முதல் பிரதமராகி இருக்கிறார்.
இதை தொடர்ந்து இந்தியாவில் பெரும்பான்மை இல்லாத சமுதாயத்தை சேர்ந்தவர்களை அதிகாரமிக்க பதவிகளில் அமர செய்ய வேண்டும் எனவும், இது சாத்தியமா? என்பது பற்றிய விவாதங்கள் கிளம்பி உள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;-
பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராகி உள்ளார். இது நல்ல விஷயம். வரவேற்க்கத்தக்கது. இதில் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும். இந்தியாவில் இந்து, சீக்கியர், பவுத்தர் அல்லது ஜைனர் அல்லாத ஒருவர் பிரதமராக முடியுமா?. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பது வார்த்தை அளவில் மட்டும் தான் உள்ளது.
இந்தியாவில் முஸ்லிம்கள் ஜனாதிபதியாக இருந்துள்ளனர். இருப்பினும் இது சம்பிரதாய பொறுப்பு தான். இதை கூறினால் காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகளாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்தாரே. அவர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர் தானே என கூறுவார்கள். ஆனால் பெரும்பாலான இந்துக்கள் சீக்கியர்களை வித்தியாசப்படுத்தி பார்ப்பது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது பெரும்பான்மைவாதிகள் என்ற அடிப்படையிலான அரசியல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜக மிகவும் பின்தங்கி உள்ளது. பாஜகவில் இந்து, ஜெயின் அல்லது சீக்கியர் அல்லது பவுத்தர் அல்லாத ஒருவர் பிரதமராக வருவதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?.
தற்போதைய சூழலில் பாஜகவுக்கு ஒரு முஸ்லிம் எம்பி கூட இல்லை. சோனியா காந்தி தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட பிரதமர் பதவிக்கு முயன்றபோது இத்தாலியை சேர்ந்தவர், அவர் பிறப்பால் கிறிஸ்தவர் என கூறினார்கள்.
இதையடுத்து தான் மன்மோகன் சிங் பிரதமரானார். மேலும் பாஜகவின் அப்போதைய மூத்த தலைவர் ஒருவர் (சுஷ்மா சுவராஜ் பெயரை குறிப்பிடாமல்) சோனியா காந்தி பிரதமரானால் மொட்டையடித்து கொள்வேன் என கூறினார்.
பிரிட்டிஷ் இனவெறியை விமர்சிக்கும் நபராக நான் இருந்தேன். வெளிப்படையாக இனவெறி வரலாறு என்பது பிரிட்டிஷ்காரர்களுக்கு உண்டு. ஆனால் ஒரு இந்துவை தங்கள் நாட்டின் பிரதமராக தேர்வு செய்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் தங்களின் மோசமான பண்புகளை கைவிட்டதாக எண்ணுகிறேன்.
ஏனென்றால் ஒரு காலத்தில் தரம் தாழ்ந்தவர்கள் என்று அவர்கள் கருதிய ஒரு இனத்தை சேர்ந்தவரை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். பிரிட்டன் பிரதமராக உள்ள ரிஷி சுனக் இந்து மதத்தை வெளிப்படையாக பின்பற்றி வருகிறார். அவரது தேர்வை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.
அதோடு இத்தகைய தேர்வு என்பது நம்நாட்டில் உள்ள அரசியல் நிலை பற்றி சிந்திக்க வைக்கும் என நினைக்கிறேன். மேலும் ரிஷி சுனக்கின் வெற்றியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியது என்னவென்றால் ஒருநபரின் இனத்தை வைத்து மட்டுமே தலைமை பண்புக்கு வருவதை தடுக்க கூடாது என்பது தான்.
மேலும் ரிஷி சுனக்கின் வயதும் முக்கியமான ஒன்றாக உள்ளது. 42 வயதில் பிரிட்டனின் இளம் பிரதமராக அவர் உள்ளார். இந்த விஷயத்தில் இந்தியாவில் பாஜக மட்டுமின்றி அனைத்து கட்சிகளையும் குற்றம்சாட்டுவேன். இந்தியாவில் வயது குறைந்தவர்கள் இத்தகைய பதவிக்கு வருவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும்
என கூறி உள்ளார்.