மூதாட்டி மீது இரும்பு கம்பியால் கொடூர தாக்குதல்
மூத்த மகன் வீட்டிற்கு செல்லும்படி கூறி மூதாட்டியை, இரும்பு கம்பியால் இளைய மருமகள் கொடூரமாக தாக்கிய சம்பவம் துமகூரு அருகே நடந்து உள்ளது.
துமகூரு:-
மூத்த மகன் வீட்டிற்கு....
துமகூரு மாவட்டம் குனிகல் டவுன் கே.ஆர்.அக்ரஹாரா பகுதியில் வசித்து வருபவர் சிக்கதாயம்மா (வயது 65). இவருக்கு சிவக்குமார், சங்கர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. மூத்த மகனான சிவக்குமார் தனது மனைவி, குழந்தைகளுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். 2-வது மகன் சங்கர் தனது மனைவி சவுமியா, 2 குழந்தைகளுடன் குனிகல்லில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சிக்கதாயம்மாவுக்கும், சவுமியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறின் போது சவுமியா, சிக்கதாயம்மாவிடம் பெங்களூருவில் வசிக்கும் சிவக்குமார் வீட்டிற்கு சென்று விடும்படி கூறியுள்ளார். ஆனால் இதற்கு சிக்கதாயம்மா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இரும்பு கம்பியால் தாக்குதல்
இதனால் ஆத்திரம் அடைந்த சவுமியா, சிக்கதாயம்மாவை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் சிக்கதாயம்மாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பெங்களூருவுக்கு செல்லாவிட்டால் அடித்தே கொலை செய்து விடுவேன் என்றும் சிக்கதாயம்மாவை, சவுமியா மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் சிக்கதாயம்மாவை மீட்டு துமகூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் குனிகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுமியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.