காதலி மீது காரால் மோதிய காதலன் - மும்பையில் அதிர்ச்சி சம்பவம்

விபத்து நடந்து அரை மணி நேரத்திற்கு பிறகு அவ்வழியே சென்ற ஒருவர் காயமடைந்த பிரியாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்.

Update: 2023-12-16 09:47 GMT

மும்பை,

மராட்டிய மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வருபவர் அனில் கெய்க்வாட். இவரது மகன் அஸ்வஜித் கெய்க்வாட். அஸ்வஜித்தும் பிரியா என்பவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் அஸ்வஜித் தனது குடும்ப விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரியாவை போனில் அழைத்திருக்கிறார். இதையடுத்து காதலன் அழைத்ததால் பிரியாவும் அங்கு சென்றிருக்கிறார். அங்கு சென்ற பிரியா அஸ்வஜித்தின் சில நண்பர்களைச் சந்தித்திருக்கிறார். அஸ்வஜித்தின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பிரியா அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். காதலனுக்காக வெளியே காத்திருந்த பிரியாவை வெளியே வந்த அஸ்வஜித்தும் அவருடைய நண்பர்களும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தொந்தரவு செய்திருக்கின்றனர். இதை தொடர்ந்து அஸ்வஜித் பிரியாவை அடித்து கழுத்தை நெரித்து கீழே தள்ளியிருக்கிறார். பின்னர் அஸ்வஜித், டிரைவரின் உதவியுடன் பிரியா மீது காரை மோதி இருக்கிறார். இதனால் படுகாயம் அடைந்த பிரியா சாலையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

விபத்து நடந்து அரை மணி நேரத்திற்கு பிறகு அவ்வழியே சென்ற ஒருவர் காயமடைந்த பிரியாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் பற்றி அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் பிரியாவிடம் சம்பவம் பற்றி கேட்டு அறிந்தனர். இச்சம்பவம் பற்றி அஸ்வஜித் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அஸ்வஜித்தை போலீசார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்