சூடானில் இருந்து மேலும் 135 இந்தியர்கள் மீட்பு 30 பேர் தாயகம் வந்தடைந்தனர்
சூடானில் இருந்து மேலும் 135 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். 30 பேர் தாயகம் வந்தடைந்தனர்.
புதுடெல்லி,
உள்நாட்டு போர் நடந்துவரும் ஆப்பிரிக்க நாடான சூடானில் இருந்து இந்தியர்கள் 'ஆபரேஷன் காவேரி' என்ற மீட்பு திட்டத்தின் மூலம் மத்திய அரசால் மீட்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் 231 இந்தியர்கள் தாயகம் திரும்பியநிலையில், நேற்று மேலும் 135 இந்தியர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டனர். அவர்கள் 22-வது பகுதியாக, போர்ட் சூடான் நகரில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு இந்திய விமானப் படை விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சூடானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு மீட்டு வரப்பட்ட இந்தியர்களில் 14 பேர் ஜெட்டாவில் இருந்து மும்பைக்கு விமானத்தில் புறப்பட்டனர். அதேபோல 16 இந்தியர்கள், லக்னோ செல்லும் விமானத்தில் புறப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.சூடான் நாட்டில் இருந்து இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சூடான் தலைநகர் கார்ட்டூமில் இருந்து பஸ்கள் மூலமாக அவர்கள் 850 கி.மீ. தொலைவில் உள்ள போர்ட் சூடான் நகருக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து விமானம் அல்லது கப்பல் மூலம் ஜெட்டாவுக்கு மீட்டு வரப்படுகின்றனர். இந்த 'ஆபரேஷன் காவேரி' மீட்பு திட்டத்தில் இதுவரை 5 இந்திய கடற்படை கப்பல்களும், 13 இந்திய விமானப்படை விமானங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.