எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நண்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

மத்திய அரசு அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துகிறது என கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-04 06:57 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனிடையே அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், இன்று மக்களவை கூடியதும், அமலாக்கத்துறை நடவடிக்கை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முயன்றனர். அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை தங்கள் இருக்கைக்கு செல்ல அறிவுறுத்தினார்.

ஆனால் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சபாநாயகர் ஓம்பிர்லா மக்களைவை நண்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்