பென்ஸ் காருடன் மோதி இரண்டாக உடைந்த டிராக்டர்... காரின் தரம் பற்றி நெட்டிசன்கள் புகழாரம்

மெர்சிடிஸ்-பென்ஸ் ரக காருடன் மோதிய டிராக்டர் இரண்டாக உடைந்த நிலையில், காரின் தரம் பற்றி நெட்டிசன்கள் உயர்வாக கூறி வருகின்றனர்.

Update: 2022-09-28 07:02 GMT


திருப்பதி,


டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54). இவர் மும்பை அருகே பயணித்தபோது கடந்த 4-ந்தேதி, விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானார்.

இந்த நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். விபத்து குறித்து போலீஸ் ஐ.ஜி. சஞ்சய் மொகிதே கூறுகையில், "பிரேக்கின் நிலை குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்கும் தகவல்களை சரிபார்போம். இதுபோன்ற உயர்தர வகனங்களில் டயர் அழுத்தம், பிரேக் ஆயில் அளவு போன்ற விவரங்களை பெற முடியும். வாகனத்தின் நிலையை பார்க்கும்போது அது அதிவேகமாக வந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது" என்றார்.

விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்த்ரி மற்றும் ஜிஹாங்கிர் பண்டொலி என 2 பேரும் சீட் பெல்ட் அணியவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என போலீஸ் சூப்பிரண்டு பாலாசாகேப் பாட்டீல் கூறினார்

இந்தியாவில் ஆடம்பர சொகுசு கார் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ஜெர்மனியின் மெர்சிடிஸ் பென்ஸ் ரக கார் தயாரிப்பாளர்கள், இந்த விபத்து பற்றி ஆய்வு செய்ய ஹாங்காங்கில் இருந்து நிபுணர்கள் குழுவை வரவழைத்து உள்ளது.

எனினும், பின் சீட்டில் இருந்தபோதும் சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை என்பதும் அதனால், அவர் உயிரிழந்து இருக்க கூடும் என்றும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் உள்ளூர் போலீசாரும் தெரிவித்து உள்ளனர்.

இந்த விபத்தில் காரில் முன் பக்கத்தில் இருந்த 2 பேரும் உயிர் பிழைத்துள்ளனர்.

இருப்பினும், பென்ஸ் காரின் தரம் பற்றி பல சந்தேகங்கள் இணையதளத்தில் கேள்வியாக உலா வந்தன. இந்நிலையில், மற்றொரு வீடியோ ஒன்று வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவில், பென்ஸ் ரக காரின் கட்டுமான தரத்துடன் தொடர்புடைய காட்சிகள் அடங்கியுள்ளன.

ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி அருகே கருப்பு நிற மெர்சிடிஸ்-பென்ஸ் ரக செடான் கார் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதில் காருடன் மோதிய டிராக்டர் இரண்டாக உடைந்து கிடக்கிறது. ஆனால், கார் லேசான அளவிலேயே சேதமடைந்து காணப்படுகிறது.

இது, ஜெர்மன் ரக காரின் தயாரிப்பு தரத்திற்கு சான்றாக உள்ளது என உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த டிராக்டர் மாஸ்சி பெர்குசன் நிறுவன தயாரிப்பு ஆகும்.

எனினும், இணையதளவாசிகள் சிலர், இது பென்ஸ் ரக காரின் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ காட்சியாக இருக்கும் என விமர்சனங்களை பகிர்ந்து உள்ளனர். ஒரு சிலர், அப்படியென்றால் டிராக்டரில் வந்தவர்களின் உயிரிழப்புக்கு என்ன பதில். அது எவ்வளவு பழையது, பராமரிப்பு என்பது பற்றி தெரியவில்லை என்றபோதும், விவசாயிகளின் வாழ்வு ஆபத்தில் இல்லையா? என்றும் கேட்டுள்ளனர்.

இதன்படி, ஒவ்வொரு விபத்திலும் கார்கள் சிக்கும்போது, அதனை பற்றி எந்தவொரு முடிவுக்கும் நாம் வந்து விட முடியாது. ஆனால், சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பது அவசியம் என நினைவூட்டுகிறது.

எப்போதும், காரின் முன் அல்லது பின் பக்க சீட் என்றாலும் சீட் பெல்ட் அணிய வேண்டும். மெதுவாக காரை செலுத்தவும், வரையறுக்கப்பட்ட வேக விதிகளுக்கு உட்பட்டு, அனைத்து போக்குவரத்து விதிகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது சுட்டி காட்டப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்