கல்லூரி விளையாட்டு விழாவில் கபடி விளையாடிய மாணவி சுருண்டு விழுந்து சாவு
கபடி விளையாடியபோது கல்லூரி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த பரிதாப சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூரு:
கல்லூரி மாணவி
தார்வாரை சேர்ந்தவர் சங்கீதா (வயது 17). இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திபெலே பகுதியில் உள்ள செயின்ட் பிலோமினா கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஆனேக்கல் அருகே பாலகாரனஹள்ளி பகுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
இதில் சங்கீதா, கபடி போட்டியில் பங்கேற்றி இருந்தார். இந்த நிலையில், சங்கீதா தங்கள் அணிக்காக 'ரைடு' சென்றார். அப்போது எதிரணியினர் சங்கீதாவை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
மாரடைப்பால் சாவு
அந்த சமயத்தில் சங்கீதா திடீரென்று சுருண்டு விழுந்தார். இதனால் சக மாணவிகளும், பேராசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னா் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மயங்கி கிடந்த சங்கீதாவை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சங்கீதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவருடன் படித்த மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதுபற்றி சங்கீதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அத்திபெலே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிர்ச்சி
பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்பட்டு வந்த மாரடைப்பு தற்போது சிறு வயதினருக்கும் வருகிறது. கர்நாடகத்தில் சமீப காலமாக மாரடைப்பால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மரணத்துக்கு பிறகு இதய பரிசோதனை அதிகரித்து வந்தாலும், இறப்பு விகிதம் மட்டும் குறையவில்லை.
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.