குஜராத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய 8 பேர் கைது

அகமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டியதால் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-31 09:59 GMT

அகமதாபாத்,

குஜராத் மாநிலம், அமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டியதாக 8 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதுகுறித்து அகமதாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அகமதாபாத் குற்றப் பிரிவு போலீஸார் கூறியதாவது:

"மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ" (மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்) என்ற முழக்கங்கள் அடங்கிய போஸ்டர்கள் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சட்டவிரோதமாக ஒட்டப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், நட்வர பாய் போபட் பாய், ஜட்டின் பாய், சந்திரகாந்த் பாய் பாட்டீல், குல்தீப் சரத்குமார் பாட், ரவிந்தர பாய் சர்மா, அஜய் சுரேஷ் பாய் சவுகான், அரவிந்த் கோர்ஜிபாய் சவுகான், ஜீவன் பாய் வசுபாய் மகேஷ்வரி, பர்தேஷ் வசுதேவ்பாய் துல்சியா என்பது தெரியவந்துள்ளது'' என்றனர்.

இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் இசுதன் காத்வி கூறுகையில்,

"கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்த நடவடிக்கை, போலீசாருக்கு பாஜக மீதுள்ள பயத்தைக் காட்டுகிறது' என்றார்.

மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பாஜகவின் சர்வாதிகாரத்தைப் பாருங்கள்! குஜராத்தில், "மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ" என்ற போஸ்டர் ஒட்டியதற்காக ஆம் ஆத்மி கட்சியினர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மோடி மற்றும் பாஜக மீதுள்ள பயம் காரணம் இல்லையென்றால் வேறு என்ன காரணம் இருக்க முடியும். நீங்கள் விரும்பும் அளவுக்கு கஷ்டப்படுத்துங்கள். ஆம் ஆத்மி தொண்டர்கள் தொடர்ந்து போராடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், பிரதமரைக் குறிவைத்து ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் டெல்லியில் ஒட்டப்பட்டன. இது தொடர்பாக 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் அச்சக உரிமையாளர்கள் ஆவார்கள். பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததற்காகவும், சட்டத்தின்படி அச்சிடப்பட்ட அச்சகத்தின் பெயரைச் சுவரொட்டிகளில் குறிப்பிடாததற்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.

கைது குறித்து பேசிய டெல்லி முதல்-மந்திரி அர்விந்த் கேஜ்ரிவால், சுதந்திரத்திற்கு முன்பு கூட, சுதந்திர போராட்ட வீரர்கள் சுவரொட்டிகளை ஒட்டினார்கள், அவர்கள் மீதுகூட வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பகத் சிங் பல சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார், அவர் மீது ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்