துணை ராணுவ படைகளில் 41,606 பெண்கள்: மத்திய அரசு தகவல்

ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு உடல்தர தேர்விலும் மற்றும் உடல்திறன் தேர்விலும் தளர்வுகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

Update: 2024-02-06 09:23 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த ராய் இன்று அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீசார், சஹஸ்திர சீம பால் மற்றும் எல்லை பாதுகாப்பு படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் பெண்களை பணியமர்த்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்து வருகிறது.

இந்த ஆயுத போலீஸ், அசாம் ரைபிள் உள்ளிட்ட துணை ராணுவ படைகளில் 41,606 பெண்கள் பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்து உள்ளார். இந்த ஆள்சேர்ப்பு பணியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, அச்சு மற்றும் மின்னணு ஊடகம் வழியே பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் அனைவருக்கும் விண்ணப்ப கட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மத்திய ஆயுத போலீஸ் படைக்கான ஆள்சேர்ப்பில், ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு உடல்தர தேர்விலும் மற்றும் உடல்திறன் தேர்விலும் தளர்வுகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

இதேபோன்று, மத்திய அரசின் கீழ் வழங்கப்படுகிற, கர்ப்பகால விடுமுறை மற்றும் குழந்தை நல விடுமுறை ஆகியவையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு வழங்கப்படுவது போன்று, பெண்களுக்கும், பணி உயர்வு மற்றும் பணி மூப்பு போன்ற அவர்களுடைய தொழிலில் முன்னேற்றம் காண்பதற்கான விசயங்களில் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் மந்திரி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்