பாலக்காடு: சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலி..!
பாலக்காடு அருகே சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா:
கேரள மாநிலம், ஆலப்புழை அருகே உள்ள சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர்கள் பைபி (வயது 72). தனது குடும்பத்துடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அன்னை வேளாங்கண்ணி கோயிலுக்கு சுற்றுலா சென்றார்கள். சுற்றுலா முடிந்த உடன் அங்கிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் சேர்த்தலாவிற்க்கு புறப்பட்டார்கள்.
அப்போது பாலக்காடு வடக்கஞ்சேரி அருகே மாலை 5 மணி அளவில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவர்கள் வந்த வாகனமும் சிற்றூரை நோக்கி வந்த மற்றொரு சுற்றுலா பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இதில் டெம்போ டிராவலர் வாகனத்தில் இருந்த பைபி, இவருடைய மனைவி ரோஸ்லி (65), பைபி தம்பி மனைவி ஜெலி (51). ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்த வடக்கஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை மீட்டு வடக்கஞ்சேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் காயமடைந்தவர்களை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்து குறித்து வடக்கஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.