ஜோத்பூர் வன்முறை; ராஜஸ்தான் அரசிடம் அறிக்கை கோரியது உள்துறை அமைச்சகம்

ஜோத்பூரில் 10 போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று நள்ளிரவுவரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

Update: 2022-05-04 10:13 GMT
புதுடெல்லி,

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ரமலான் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, அம்மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் ஜலோரி கேட் சர்க்கிள் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறுபான்மையினர் இஸ்லாமிய கொடிகளை கட்டி வைத்தனர். ரவுண்டானா அருகில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் பல்முகுந்த் பிஸ்சா சிலையிலும் அந்த கொடிகள் வைக்கப்பட்டு இருந்தன.

அதற்கு மற்றொரு சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பரசுராம் ஜெயந்திக்காக தாங்கள் வைத்திருந்த காவி கொடிகளை அகற்றிவிட்டு, இஸ்லாமிய கொடிகள் வைக்கப்பட்டதாக அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதையடுத்து, இருதரப்பினரும் கற்களால் தாக்கிக்கொண்டனர். போலீசார் அதிக அளவில் வரவழைக்கப்பட்டனர். நேற்று அதிகாலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இருப்பினும், நேற்று காலை ரமலான் தொழுகைக்கு பிறகு மீண்டும் வன்முறை வெடித்தது. கடைகள், வாகனங்கள், வீடுகள் ஆகியவை கற்கள் வீசி தாக்கப்பட்டன.போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் கலைந்து போக வைக்க முயன்றனர். அப்போதும் கலைந்து செல்லாததால், கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இந்த சம்பவத்தில் 5 போலீசார் காயமடைந்தனர். அதன்பிறகும் நிலைமை பதற்றமாகவே இருந்தது. அதனால், ஜோத்பூரில் 10 போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று நள்ளிரவுவரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

அறிக்கை கோரிய உள்துறை அமைச்சகம்

இந்த நிலையில்,  ஜோத்பூரில் இரு பிரிவினர் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது. அங்குள்ள சூழலை உன்னிப்பாக உள்துறை அமைச்சகம் கண்கணிப்பதாகவும் மாநில நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் இருந்து தகவல்களை உள்துறை அமைச்சகம் அவ்வப்போது பெற்று வருவதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் செய்திகள்