மணிப்பூரில் 55 ஏக்கர் கசகசா பயிர் அழிப்பு - வனத்துறை நடவடிக்கை
சட்டவிரோதமாக பயிரிட்ட குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இம்பால்,
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் ஷைகாய் குல்லென் மலைத்தொடர் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக சிலர் கசகசாவை பயிரிட்டு வளர்த்து வந்துள்ளனர். வனத்துறையின் ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட 55 ஏக்கர் கசகசா பயிர்கள், போலீசார் பாதுகாப்புடன் அழிக்கப்பட்டன. அப்போது அந்த தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 5 குடிசைகளும் எரிக்கப்பட்டன. இங்கு சட்டவிரோதமாக பயிரிட்ட குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதுவரை 12 மாவட்டங்களில் 19 ஆயிரத்து 135 ஏக்கர் சட்டவிரோத கசகசா பயிர்களை மணிப்பூர் அரசு அழித்துள்ளது. இதில் கங்போக்பி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 454 ஏக்கர் மற்றும் உக்ருல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 348 ஏக்கர் பயிர்கள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.